மலாக்காவில் இன்று காலை, மானிய விலையில் விற்கப்படும் 1 கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஏ எம் ஜே
நெடுஞ்சாலையின் கந்தாங் சந்திப்பு போக்குவரத்து விளக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் சுமார் 5,000 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் சாலையில் சிதறிக் கிடந்தன. இதில் சுமார் 1,000 பாக்கெட்டுகள் சேதமடைந்து எண்ணெய் சாலையில் கசிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11.44 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, பதாங் தேமு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையிலிருந்து ஆறு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சாலையில் கசிந்த எண்ணெயை அகற்றி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சாலை வழுக்கும் அபாயத்தைத் தடுக்க, கசிந்த எண்ணெய் மீது மரத்தூள் தூவப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் பிற்பகல் வரை தொடர்ந்தன.
சம்பவ இடத்தில் பலர் வாகனங்களை நிறுத்தி விபத்தைப் பார்வையிட்ட போதிலும், சாலையில் சிதறியிருந்த எண்ணெய் பாக்கெட்டுகளை எவரும் எடுத்துச் செல்ல முயற்சிக்கவில்லை. பொதுமக்கள் அவற்றை எடுக்க வேண்டாம் என்றும், மீதமுள்ள எண்ணெய் பாக்கெட்டுகளை நிறுவனம் திரும்பச் சேகரிக்கும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.