மெக்சிகோ:
இன்று அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் எல் பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கான முதல் கோலை அதன் கேப்டன் ஹேரி கேன் பெனால்டி வாய்ப்பின் வழி 12ஆவது நிமிடத்தில் புகுத்தினார்.
ஆனாலும் 36ஆவது நிமிடத்தில் மார்ட்டின் எனும் ஆட்டக்காரர் குரோஷியா அணிக்கான முதல் கோலை புகுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினார்.
ஹேரி கேன் மீண்டும் ஒரு கோலை புகுத்திய நிலையில் முதல் பாதி நேரம் முடிவடையும் தருவாயில் பீட்டர் மூசா எனும் ஆட்டக்காரர் குரோஷியா அணிக்கான இரண்டாவது கோலை புகுத்தி ஆட்டத்தை மீண்டும் சமப்படுத்தினார். இதனையடுத்து முதல் பாதி நேரம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.
இதனையடுத்து பரப்பரப்பாக தொடங்கிய இரண்டாம் பாதி நேரத்தில் இங்கிலாந்து அணி கோல் புகுத்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டது.
அதன் பலனாக ஆட்டத்தின் 47ஆவது நிமிடத்தில் ஜூட் பெலிங்ஹாம், 87ஆவது நிமிடத்தில் ரஷ்போர்ட் ஆகியோர் கோல் புகுத்தினர். இறுதியில் ஆட்டம் 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக முடிவுற்றது.