Offline
Menu
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகும் வைகோ?
By Administrator
Published on 06/19/2026 09:00
News

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நியமிக்க தமிழக முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட இந்த உயர் பதவியின் அதிகாரப்பூர்வக் காலம் ஓராண்டு மட்டுமே என்ற போதிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நீடிக்கும் வரை இப்பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முதன்மையான மற்றும் முக்கியப் பொறுப்பாகும். டெல்லி அரசியலிலும் மத்திய தலைவர்களிடமும் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட மூத்த தலைவரான வைகோவின் இந்த நியமனம், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியிலிருந்து மதிமுக தேர்தலை எதிர்கொண்டது. மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இரண்டு இடங்களில் மதிமுக வென்ற நிலையில், தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் மாறியது. திமுக, அதிமுகவை ஓரம் கட்டி தவெக பெரிய வெற்றியை பெற்றது. இருப்பினும் பெரும்பான்மை இல்லாததால், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

இதற்கு கைமாறாக 2 எம்எல்ஏக்களை கொண்டிருந்த விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியை தவெக கொடுத்தது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், மதிமுக திமுகவை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. ஒருவேளை மதிமுக வேட்பாளர்கள் தனி சின்னத்தில் நின்றிருந்தால் நிச்சயம் அக்கட்சியும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் என்று சொலும் அளவிற்கு மதிமுகவின் செயல்பாடு தற்போது உள்ளது. தவெக அரசை வைகோவும் துரைவைகோவும் தொடர்ந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments