Offline
Menu
மோட்டார் சைக்கிளோட்டியை கத்தியால் தாக்கிய சம்பவம் ; ஆடவர் மீது குற்றச்சாட்டு
By Administrator
Published on 06/19/2026 09:00
News

ஷா ஆலாம்:

கடந்த வாரம் கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டியை கத்தியால் தாக்கிய குற்றச்சாட்டை ஆடவர் ஒருவர் இங்குள்ள செஷன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

நீதிபதி டத்தின் ஃபாத்தின் ஸஹாரி முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டதும் 43 வயதான அஸ்மி ஜந்தான் எனும் அந்த ஆடவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

முன்னதாக இம்மாதம் 11ஆம் தேதி செக்‌ஷன் 13, கூட்டரசு நெடுஞ்சாலையின் 14.6ஆவது கிலோ மீட்டர் தூரத்தில் (மோட்டார் சைக்கிள் வழியில்) சம்பந்தப்பட்ட ஆடவர் 45 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டியை வெட்டுக் கத்தியால் கடுமையாக தாக்கி பலத்த காயத்தை விளைவித்ததாக குற்றவியல் சட்டம் பிரிவு 326 கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உள்நாட்டு பிரஜை ஒருவரின் உத்தரவாதத்தோடு 30,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கும்படி டிபிபி பரிந்துரைத்தார்.

ஆனாலும் தமக்கு குறைந்தபட்சமாக 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகை அனுமதிக்குமாறு வழக்கறிஞர் பிரதிநிதிக்கபடாத அஸ்மி கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து நீதிமன்ற தரப்பு அவருக்கு 15,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை அனுமதித்தது. மேலும் இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது.

 

Comments