கோலாலம்பூர்;
அடுதத மாதம் நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில், தங்களின் ‘பார்ட்டி பெர்சாமா மலேசியா’ (Bersama) கட்சி 15 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான ரஃபிஸி ராம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமத் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், வாக்காளர்களின் போக்கு, கடந்த ஆறு மாத கால தரவு பகுப்பாய்வு (Survey Data), உள்ளூர் அளவில் கட்சியின் பலம், வேட்பாளர்களின் தகுதி மற்றும் தேர்தல் பிரச்சாரக் கள நிலவரம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே இந்த 15 தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பெர்சாமா கட்சி போட்டியிடவுள்ள அந்த 15 தொகுதிகள்: புக்கிட் நானிங், மாக்கோத்தா, திராம், புத்திரி வாங்சா, ஜோகூர் ஜெயா, பெர்மாஸ், லார்க்கின், ஸ்துலாங், பெர்லிங், கெம்பாஸ், ஸ்கூடாய், கோத்தா இஸ்கந்தர், புக்கிட் பெர்மாய், புக்கிட் பத்து மற்றும் செனாய் ஆகும்.
இவற்றில் தற்போது 8 தொகுதிகள் அம்னோவிடமும் (UMNO), 5 தொகுதிகள் ஜனநாயகச் செயல் கட்சியிடமும் (DAP), பிகேஆர் (PKR) மற்றும் மூடா (MUDA) ஆகிய கட்சிகளிடம் தலா ஒரு தொகுதியும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 15 தொகுதிகளுக்கான பெர்சாமா கட்சியின் வேட்பாளர்கள், வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 26) இரவு 8:00 மணிக்கு ஜோகூர் பாருவில் நடைபெறவிருக்கும் கட்சியின் பிரத்யேக “கிரெத்தா காஞ்சில்” (trak kancil) பிரச்சார வாகனத் தொடக்க விழாவின் போது அறிவிக்கப்படவுள்ளனர். இந்த விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
இத்தேர்தலில் கட்சியின் தேர்தல் இயந்திரத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் உறுப்பினர்களும் பொதுமக்களும், வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணும் முகவர்களாக (Polling and Counting Agents) செயல்பட அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழி பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.