Offline
Menu
வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவையை அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி?
By Administrator
Published on 06/24/2026 16:07
News

சென்னை, வடபழனி – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கமிஷனர் ஒப்புதல்

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் வடபழனி – பூந்தமல்லி இடையே 14.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைதோட்டம், குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர் உள்ளிட்ட 10 ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு பாதுகாப்பு கமிஷனர் ஒப்புதல் வழங்கி இருந்தார். பாதுகாப்பு கமிஷனரின் ஒப்புதல் பெறப்பட்டதால் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதால் வடபழனி – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடியாமல் போனது.

ஜூலையில் தொடக்கம்

இந்த நிலையில், தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பின்னர் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. வடபழனி – பூந்தமல்லி இடையே பணிகள் முடிவடைந்தது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, அடுத்த மாதம் 2-வது அல்லது 3-வது வாரத்தில் வடபழனி – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மத்திய மந்திரி சபையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜூலை மாதத்தின் 2 அல்லது 3-வது வாரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 2 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என கூறப்படுகிறது. அதோடு இணைந்து வடபழனி – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க வாய்ப்புள்ளது. இவ்வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது 90 நிமிடமாக இருந்த பூந்தமல்லி – வடபழனி இடையிலான பயண நேரம் 30 நிமிடமாக குறையும். சாலை போக்குவரத்து நெரிசலும் குறையும்.

Comments