Offline
Menu
ஸ்ரீ ரம்பாய் உணவு வளாகத்தில் சோகம்: மியன்மார் நாட்டைச் சேர்ந்த UNHCR அட்டை வைத்திருந்த ஆடவர் சடலமாக மீட்பு!
By Administrator
Published on 06/27/2026 13:00
News

கோலாலம்பூர்:

இங்குள்ள தாமான் ஸ்ரீ ரம்பாய் (Taman Sri Rampai), டி’ரெஜாங் (D’Rejang) பகுதியில் உள்ள உணவு வளாகம் ஒன்றில், மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஐநா அகதிகள் ஆணையத்தின் (UNHCR) அடையாள அட்டை வைத்திருந்த நபர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வாங்சா மாஜு (Wangsa Maju) மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் அன்னாஸ் சுலைமான் கூறுகையில், நேற்று காலை 10.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையிலேயே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தெரிவித்தார்.

உணவு வளாகத்தில் உள்ள சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் அந்த நபர் மயங்கிய நிலையில் கிடந்ததை அங்கு வந்த பொது மக்கள் கவனித்துள்ளனர். பின்னர் மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. வீடற்றவராக (Homeless) அறியப்படும் அந்த நபரின் உடலில் காயங்கள் ஏதும் இருப்பதாக முதற்கட்டமாகத் தெரியவில்லை.

இதுகுறித்து அன்னாஸ் சுலைமான் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தகவல் கிடைத்ததும் காவல்துறையின் தடயவியல் குழுவினரும், விசாரணை அதிகாரியும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விரிவான சோதனைகள் நடத்தப்பட்டன.

உயிரிழந்த நபரின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதுவரை இப்போதைக்கு இக்கேசைக் காவல்துறை திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளது.”

மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் விபரங்கள் அல்லது தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் யாராக இருந்தாலும், உடனடியாக வாங்சா மாஜு மாவட்டக் காவல்துறை தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அன்னாஸ் சுலைமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments