Offline
Menu
சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 14 பேர் உயிரிழப்பு
By Administrator
Published on 06/30/2026 08:00
News

ரியாத், சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று அதிகாலை ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த 14 பேரும் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சவுதி எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் சவுதி நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஸ் தனுரா, ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமாகும்.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக சுமார் நான்கு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி பணிகளை, கடந்த வெள்ளிக்கிழமை அராம்கோ நிறுவனம் மீண்டும் தொடங்கியது. அமெரிக்கா-ஈரான் இடையேயான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரித்து வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Comments