Offline
Menu

LATEST NEWS

சுங்கை பட்டாணி, சுபாங் ஜெயாவில் ரயில்வே கேபிள் திருட்டு: இரண்டு பேரை கைகலப்புடன் பிடித்தது KTMB துணைப் போலீஸ்!
By Administrator
Published on 06/30/2026 10:00
News

மலேசியத் தேசிய ரயில்வே நிறுவனமான ‘கெரெதாபி தானா மெலாயு பெர்ஹாட்’ (KTMB) அமைப்பின் துணைப் போலீசார், நேற்று நடத்திய இரு வேறு அதிரடி நடவடிக்கைகளில் ரயில்வே கேபிள்களைத் திருடிய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கேடிஎம்பி (KTMB) விடுத்துள்ள அறிக்கையின்படி, முதல் நடவடிக்கை கேடா வழித்தடத்தில் (Kedah Line – தாசேக் குளுகோர் மற்றும் சுங்கை பட்டாணி இடையே) கிலோமீட்டர் 10.30-இல் மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்ட வேளையில், அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பியோடிவிட்டார். இச்சோதனையில் திருடப்பட்ட ரயில்வே கேபிள்கள் மற்றும் அவற்றை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சுபாங் ஜெயா தாசேக் (Tasik Subang Jaya) கிலோமீட்டர் 14.706-இல் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில், மற்றொரு சந்தேக நபர் வெட்டப்பட்ட கேபிள்களுடன் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார். குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு வாகனங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

“கைது செய்யப்பட்ட நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் மேல் விசாரணைக்காக ராயல் மலேசிய போலீஸாரிடம் (PDRM) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்துவதும், கேபிள்களைத் திருடுவதும் 1991 ரயில்வே சட்டம் (சட்டம் 463) மற்றும் 2010 நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டம் (சட்டம் 715)-இன் கீழ் கடுமையான குற்றமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், கேடிஎம்பி கட்டுப்பாட்டு மையத்தை 03-2263 1194 (24 மணி நேர சேவை) என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments

More news