Offline
Menu

LATEST NEWS

பூடி மடானி டீசல் மானியம்: 30,000 பேருக்குக் கூடுதல் ஒதுக்கீடு வழங்க அரசு ஒப்புதல்!
By Administrator
Published on 07/02/2026 10:00
News

கோலாலம்பூர்:

புத்ராஜெயாவில் இன்று முதல் நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ள ‘புடி மடானி டீசல்’ (BUDI Diesel) மானியத் திட்டத்தின் கீழ், மாதாந்திர டீசல் ஒதுக்கீட்டை இருநூறு லிட்டரிலிருந்து முந்நூறு லிட்டராக உயர்த்திப் பெறுவதற்காக விண்ணப்பித்த முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பயனீட்டாளர்களுக்கு நேற்று வரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக இரண்டாம் நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் அதிக அளவில் டீசலைப் பயன்படுத்தும் சிறு வணிகர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த மேம்பாடு கொண்டுவரப்பட்டுள்ள வேளையில், தங்களின் டீசல் மானியத்தை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிக்கொள்வதற்கான ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, டீசல் வாகன உரிமையாளர் பெயர் மாற்றத்திற்கான நூறு ரிங்கிட் வரையிலான கட்டண விலக்கு இன்று முதல் மூன்று மாதங்களுக்கு அமல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு ஏதுவாக, வரும் ஜூலை 4 முதல் ஜூலை 31 வரை அனைத்து மாநில சாலைப் போக்குவரத்து வாரிய (JPJ) மற்றும் யு.டி.சி (UTC) அலுவலகங்களின் கவுண்ட்டர்கள் வார இறுதி நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

மேலும், டீசல் மானியக் கசிவு குறைக்கப்பட்டதன் மூலம் கிடைத்துள்ள சேமிப்பைக் கொண்டு, டீசலின் விலை இன்று முதல் லிட்டருக்கு இரண்டு ரிங்கிட் 10 சென்னாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும், தகுதியுடையவர்கள் புடி மடானி அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தங்களின் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

Comments