Offline
Menu
மணிரத்னம் – விஜய் சேதுபதி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்
By Administrator
Published on 07/03/2026 12:00
Entertainment

சென்னை, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 20 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், இந்தப் படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. ஆனால், அது உண்மையல்ல என்றும், ஏ.ஆர்.ரகுமானே இசையமைப்பாளராக இருப்பார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்காக ஏற்கனவே ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் அமைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

1992-ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ திரைப்படத்திலிருந்து மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து பணியாற்றி வருகின்றனர். முன்னதாக, ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மணிரத்னம் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மணிரத்னம், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 23’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு அழுத்தமான காதல் கதையாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, இதன் ஒட்டுமொத்த ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 20 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிரத்னத்தின் முந்தைய பிரம்மாண்ட படைப்புகளான ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் கமல்ஹாசனுடன் அவர் இணைந்துள்ள ‘தக் லைஃப் ஆகிய படங்களின் ஓடிடி உரிமத் தொகையோடு ஒப்பிடுகையில் இது சற்றே குறைவான தொகையாகப் பார்க்கப்பட்டாலும், படப்பிடிப்பிற்கு முன்பே ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய தொகை வியாபாரமாகியிருப்பது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றன.

 

Comments