முதலீட்டாளர் நம்பிக்கைக்காக உடனடியாக வெளியிட வேண்டும் – ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹாஃபிஸ்
ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலமான (JS-SEZ) முதன்மைத் திட்டம் தொடர்பாக பிரதமர் அளித்த விளக்கம் உண்மைப் பின்னணியுடன் பொருந்தவில்லை என்றும், அது முதலீட்டாளர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காசி தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலமான திட்டத்தை மேலும் தாமதப்படுத்தாமல் விரைவில் வெளியிட வேண்டும் என ஜோகூர் அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது. இதற்கு பதிலளித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்தத் திட்டம் மலேசியா–சிங்கப்பூர் தலைவர்கள் சந்திப்பில் விவாதிக்கப்பட்டு இரு நாடுகளின் பிரதமர்களின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் என கூறியிருந்தார். இதையடுத்து ஒன் ஹாஃபிஸ் தனது நிலைப்பாட்டை விரிவாக விளக்கியுள்ளார்.
“நான் பிரதமர் அல்ல என்பதை நன்கு அறிவேன். இருப்பினும், நாட்டின் உயரிய பொறுப்பில் இருப்பவர் வெளியிடும் ஒவ்வொரு கருத்தும் துல்லியமான தகவல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலமான மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணம் என்றும், அதற்கு சிங்கப்பூர் அரசின் இறுதி ஒப்புதல் அவசியமில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். சிங்கப்பூர் தரப்பின் ஆலோசனைகளும் கருத்துகளும் ஏற்கனவே பெறப்பட்டு செயல்முறை நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது மீதமிருப்பது மலேசிய அரசாங்கம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ வெளியீடு மட்டுமே என்றும் தெரிவித்தார்.
எனவே, இந்த ஆவணம் இன்னும் தலைவர்கள் சந்திப்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது அல்லது இரு நாடுகளின் பிரதமர்களின் கையொப்பம் தேவைப்படுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விளக்கம் உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, மக்களையும் முதலீட்டாளர்களையும் குழப்பமடையச் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.