Offline
Menu
ஜோகூர் அதிரடிச் சோதனை: 226 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!
By Administrator
Published on 08/05/2026 17:00
News

பாஸ்போர்ட் முறைகேடு அம்பலம்

ஜோகூர் பாரு, ‘ஸ்மார்ட் பாண்டான்’ மொத்த விற்பனைச் சந்தையில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், 226 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

இச்சோதனையின் மூலம், மலேசியாவில் தொடர்ந்து சட்டவிரோதமாகப் பணியாற்றுவதற்காக இந்தோனேசியத் தொழிலாளர்கள் சிலர் மாதம் ஒருமுறை பாஸ்போர்ட்டில் முத்திரை குத்துவதற்காக நாட்டிற்குள் சென்று வரும் உத்தி அம்பலமாகியுள்ளது.

வேலை அனுமதிப் பத்திரம் இன்றி கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் முகமட் என்ற இந்தோனேசியர், குடும்பத்தைப் பார்க்க பாத்தாம் செல்லும் சாக்கில் மாதம் ஒருமுறை சென்று பாஸ்போர்ட்டில் முத்திரை குத்திவிட்டு மலேசியாவில் தொடர்ந்து சட்டவிரோதமாகப் பணியாற்றி வந்ததை ஒப்புக்கொண்டார்.

சித்தி கமரியா என்ற மற்றொரு இந்தோனேசியப் பெண், Social Visit Pass ஐ பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்து குறுகிய காலச் சிறு தொழில்களில் ஈடுபட்டு வந்ததும், போதுமான பணம் ஈட்டிய பிறகு மீண்டும் சொந்த ஊர் சென்று பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துத் திரும்புவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது என்று, குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி தெரிவித்தார்.

மாலை 6:20 மணிக்குத் தொடங்கிய இச்சோதனையில் கைதான 226 நபர்களில் 171 ஆண்களும் 55 பெண்களும் அடங்குவர் என்றார்.

செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்தது, அனுமதித்த காலத்தை விட அதிகமாகத் தங்கியிருந்தது மற்றும் விசா விதிகளை மீறியது போன்ற குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் நாடு முழுவதும் குடிநுழைவுத் துறை நடத்திய 7,900-க்கும் மேற்பட்ட சோதனைகளில், 107,000 அந்நியர்களிடம் சோதனை நடத்தப்பட்டு, இதுவரை 45,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகளும், 1,200-க்கும் மேற்பட்ட முதலாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments