8 சந்தேகநபர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்!
கோலா லங்காட், பந்திங்கிலுள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் 49 வயதுள்ள உள்ளூர் நபர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தோட்டப் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த அந்நபர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 20 முதல் 70 வயதுடைய உள்ளூர்வாசிகளையும் வெளிநாட்டினரையும் உள்ளடக்கிய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தோட்டத்தில் இருந்த உபகரணங்கள் மற்றும் செம்பனம் பழங்களைத் திருடும் முயற்சியே இக்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் நம்பப்படுகிறது.
புதிய கைதுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்றும், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கோலா லங்காட் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டண்டன்ட் முகமட் அக்மல்ரிசால் ராட்ஸி தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் (கொலை வழக்கு) கீழ் இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.