கோலாலம்பூர், சுல்தான் இஸ்மாயில் சாலையில் குடிநுழைவுத் துறைக்கு சொந்தமான லோரி ஒன்று சிவப்பு விளக்குச் சமிக்ஞையை மீறிச் சென்று விபத்துக்குள்ளானதில், பாதசாரிகளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் ‘மஜு ஜங்ஷன்’ (Maju Junction) போக்குவரத்துச் சந்திப்பில் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 53 வயதுடைய தந்தை மற்றும் அவரது 25, 12 வயதுடைய இரு மகள்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் தாயான 55 வயதுடைய பெண்மணி பலத்த தலை மற்றும் கை, கால் காயங்களுடன் கோலாலம்பூர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Red Zone) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சோதனையில் பிடிபட்ட சட்டவிரோதக் குடியேறிகளை அழைத்து வருவதற்காகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அலுவலகத்திலிருந்து சௌக்கிட் நோக்கிச் சென்ற 43 வயது ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்த லோரி, அவசர எச்சரிக்கை விளக்கு மற்றும் சைரன் ஒலியுடன் சிவப்பு விளக்கு எரிந்த சந்திப்பிற்குள் நுழைந்துள்ளது என்று, கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (JAPT) தலைவர் உதவி ஆணையர் முகமட் ஜாம்சூரி முகமட் ஈசா கூறினார்.
அதே நேரத்தில் பச்சை விளக்கு சமிக்ஞை ஒளிரவே, 50 வயது நபரால் ஓட்டி வரப்பட்ட ‘புரோட்டான் சாகா’ கார் சந்திப்பைக் கடக்க முயன்றபோது லோரியுடன் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த குடிநுழைவுத் துறை லோரி, பாதசாரிகளாகச் சென்ற அக்குடும்பத்தினர் மீது மோதியதுடன், அங்கு நின்று கொண்டிருந்த ‘இனோகோம் மேட்ரிக்ஸ்’ (Inokom Matrix) கார் மீதும் மோதி நின்றது.
விபத்தில் தொடர்புபட்ட வாகன ஓட்டிகள் மூவரும் காயங்களின்றி தப்பினர். லோரி ஓட்டுநர் மற்றும் புரோட்டான் சாகா ஓட்டுநர் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்துள்ளனர். இருவரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் மற்றும் மதுபானப் பரிசோதனைகளில் ‘நெகடிவ்’ (Negative) என முடிவுகள் வந்துள்ளன.