கோலாலம்பூர்: மலேசியாவில் தொடர்ந்து நீடித்து வரும் கடுமையான வெப்ப அலை காரணமாகப் பழங்களும் காய்கறிகளும் வாடி வதங்குவதால், அந்நாட்டு விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும் விளைச்சல் குறைவையும் சந்தித்து வருகின்றனர்.
பயிர்களைக் வெப்பத்திலிருந்து காப்பாற்ற அடிக்கடி நீர் பாய்ச்சுதல் மற்றும் நிழல் வலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தண்ணீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொழிலாளர் கூலி எனப் பராமரிப்புச் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக மலேசியக் காய்கறி விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் லிம் செர் குவீ தெரிவித்துள்ளார்.
மேலும், பல பகுதிகளில் நிலவும் நீர்ப்பற்றாக்குறை தொடர்ந்தால், பயிரிடும் பரப்பளவைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அல்லது பயிர்களை முழுமையாக இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காய்கறி உற்பத்தி நாட்டின் உணவுப் பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடையது என்பதால், இக்கட்டான சூழலில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்த்தேக்க வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் மற்றும் எரிபொருளுக்குக் மானியம் வழங்கி உதவவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல, பழ மரங்கள் குறிப்பாக இளங்கன்றுகள் காய்ந்துவிடாமல் இருக்கக் காலை, மாலை வேளைகளில் தீவிரமாக நீர் பாய்ச்சப்பட்டு வருவதாகப் பழச்சாகுபடி சங்கத்தின் துணைத் தலைவர் நிக்கலஸ் சோங் கூறியுள்ளார். சொந்தமாக நீர்த்தேக்கம் வைத்துள்ள விவசாயிகள் நிலைமையை ஓரளவு சமாளித்தாலும், வெப்ப அலை நீடித்தால் நீர் ஆதாரங்கள் வற்றிப்போகும் அபாயம் உள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.