Offline
Menu
மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா, பாத்தேக் ஏர் விமானங்கள் ரத்து!
By Administrator
Published on 09/07/2026 15:00
News

இந்தோனேசியாவின் ‘மவுண்ட் அனாக் கிராகாதாவ்’ (Mount Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, வான்வெளியில் அடர்ந்த எரிமலைச் சாம்பல் பரவியதால், மலேசியா மற்றும் ஜகார்த்தா இடையிலான 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, ஜகார்த்தாவின் சுகார்னோ-ஹத்தா (Soekarno-Hatta) அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ், பாத்தேக் ஏர் மற்றும் ஏர் ஆசியா உள்ளிட்ட பல முன்னணி விமான நிறுவனங்கள் இக்கடுமையான முடிவை எடுத்துள்ளன.

மலேசிய ஏர்லைன்ஸ் 12 சேவைகள் ரத்து: மலேசியாவின் தேசிய விமானச் சேவை நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸ், கோலாலம்பூர் – ஜகார்த்தா இடையிலான 12 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது தொடர்பு விவரங்களை இணையதளத்தின் “மை புக்கிங்” (My Booking) பகுதியில் உடனடியாகப் புதுப்பித்து, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி (SMS) மூலம் அடுத்தகட்ட விமான நிலவரங்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பாத்தேக் ஏர் விளக்கம்: இதனிடையே, பாத்தேக் ஏர் நிறுவனம் கோலாலம்பூர்-ஜகார்த்தா மற்றும் சுபாங்-ஜகார்த்தா இடையிலான 8 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்:

“விமானப் பாதையில் அடர்ந்த எரிமலைச் சாம்பல் படர்ந்துள்ளதால், விமானிகளுக்குப் பாதை தெளிவாகத் தெரிவதில் சிக்கல் (Visibility Issue) ஏற்படுவதுடன், விமானத்தின் வழிகாட்டி அமைப்புகள் மற்றும் இயந்திரத்தின் செயல்திறன் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் கட்டணமின்றி வேறொரு பாத்தேக் ஏர் விமானத்திற்குத் தங்களது பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லது செலுத்திய பணத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் (Refund) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வான்வெளி நிலவரத்தை விமான நிறுவனங்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. பயணிகள் தங்களின் பயணத்திற்கு முன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Comments