Offline
Menu
பேராக் அரசு மருத்துவமனைகளில் நெரிசல்
By Administrator
Published on 09/09/2026 13:00
News

பேராக் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் நெரிசலுக்கு, நோயாளிகள் குறிப்பாக முதியவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு வருவது ஒரு முக்கிய காரணமாகும் என்று மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதியவர்கள் தனியாக வராமல் பிள்ளைகள் அல்லது குடும்பத்தினருடன் வருகின்றனர். மேலும், சீக்கிரம் வந்தால் மருத்துவரை விரைவாகப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் முன்பே வந்துவிடுகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்திலும், வாகன நிறுத்துமிடங்களிலும் அதிக நெரிசல் ஏற்படுகிறது என்று, பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், இந்தியர் விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுச் குழுவின் தலைவர் ஏ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் நோயாளிகளைச் சந்திப்பதற்கு முன் வார்டு பரிசோதனை (Ward Rounds) உள்ளிட்ட பிற கடமைகளையும் செய்ய வேண்டியுள்ளதால், நேரத்திற்கு முன்பே வரும் நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இருப்பினும், மருத்துவ சிகிச்சையின் தரம் குறித்து நோயாளிகள் திருப்தி அடைந்துள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு நிறுவனங்களின் (Insurance) ஒப்புதல் பெற பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் நோயாளிகள் உடனடியாகச் செல்ல முடியும் என்று அவர் கூறினார்.

நெரிசலைக் குறைப்பதற்காக தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்து பார்மசியில் நேரடியாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட கட்டணத்தில் நோயாளிகளின் வீடுகளுக்கே மருந்துகளை டெலிவரி செய்யும் சேவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் பேராக் மாநிலத்தில் உள்ள 15 அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 6,000 படுக்கைகள் உள்ளன. அதில் சுமார் 5,600 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன, 400 படுக்கைகள் காலியாக உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ள 96 படுக்கைகளில் 75 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன. அவசர காலங்களில் மட்டுமே தற்காலிகப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், ஒட்டுமொத்தமாகப் படுக்கைப் பற்றாக்குறை குறித்து எந்தப் புகாரும் வரவில்லை என்றும் சிவநேசன் கூறினார்.

Comments