கோலாலம்பூர்:
பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் அவரது மகனுக்கு எதிரான அவதூறு வழக்கில் 280,000 ரிங்கிட் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி, ‘பாப்பகோமோ’ என அறியப்படும் பிரபல பிளாக்கர் வான் முஹமட் அஸ்ரி வான் டெரிஸ் தாக்கல் செய்த மனுவைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
வான் முஹமட் அஸ்ரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், தீர்ப்பை இடைநிறுத்தம் செய்யக்கூடிய அளவிலான எவ்வித ‘சிறப்புச் சூழலும்’ இங்கு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி ரோஸ்லான் மாட் நோர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
“மேல்முறையீட்டில் தான் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும், இப்போது பணத்தை அளித்தால் தான் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்றும் பிரதிவாதி கூறிய காரணங்கள், இந்தத் தீர்ப்பை இடைநிறுத்தம் செய்வதற்கான நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த உதவாது.” என்று நீதிபதி ரோஸ்லான் மாட் நோர் தெரிவித்தார்.
மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரரான வான் முஹமட் அஸ்ரி பிரதிவாதிகளுக்குக் கூடுதல் நீதிமன்றக் கட்டணமாக 5,000 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 29-இல் லிம் குவான் சிங்கின் மகன் கிளின்ட் லிம் வாய் சோ, அறிவிக்கப்படாத 2 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டு செல்ல முயன்றதாகக் கூறி சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்று ‘பாப்பா அஸ்ரி’ என்ற பெயரில் வான் முஹமட் அஸ்ரி தனது முகநூல் பக்கத்தில் பொாய்க் குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், கடந்த மே 19-ஆம் தேதி தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், குவான் எங்கிற்கு 200,000 ரிங்கிட் நஷ்டஈடு மற்றும் 30,000 ரிங்கிட் நீதிமன்றக் கட்டணமும், அவரது மகனுக்கு 80,000 ரிங்கிட் நஷ்டஈடு மற்றும் 10,000 ரிங்கிட் நீதிமன்றக் கட்டணமும் வான் முஹமட் அஸ்ரி வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.