Offline
Menu
RON97, மானியமில்லா RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 சென் உயர்வு
By Administrator
Published on 09/24/2026 17:00
News
டீசல் 15 சென் உயர்வு!

செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில் மானியமில்லா RON97 மற்றும் RON95 பெட்ரோல் சில்லறை விலை லிட்டருக்கு 20 சென்சும், மானியமில்லா டீசல் விலை லிட்டருக்கு 15 சென்சும் உயர்த்தப்பட்டுள்ளன. 

 

இதன்படி, RON97 பெட்ரோலின் புதிய விலை லிட்டருக்கு RM5.05 ஆகவும், மானியமில்லா RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM4.57 ஆகவும், மானியமில்லா டீசலின் விலை லிட்டருக்கு RM5.42 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு (MOF) நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

 

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத் தட்டுப்பாடு காரணமாகவே சந்தை விலை தொடர்ந்து உயர் மட்டத்தில் நீடித்து வருவதாக அமைச்சு விளக்கியுள்ளது. 

மேலும் “உலகின் மிகப்பெரிய டீசல் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான ரஷ்யாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. மேலும், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து டீசல் ஏற்றுமதி கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உலகளாவிய சுத்திகரிப்புத் திறனின் மீட்சி மற்றும் ஹோர்மூஸ் நீரிணை வழியிலான பெட்ரோலிய விநியோகம் சீரடைவது ஆகியவை கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அழுத்தத்தைக் குறைக்க உதவும் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இருப்பினும், உலகளாவிய புவிசார் அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் தொடரும் மோதல்களால் எண்ணெய் போக்குவரத்துச் செலவு பெருமளவு அதிகரித்து வருவதால், பெட்ரோலியப் பொருட்களின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

“கப்பல் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, மத்திய கிழக்கிலிருந்து சில வழித்தடங்களுக்கான பிரம்மாண்ட எண்ணெய் கப்பல்களின் வாடகை நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் அமெரிக்க டாலர் (USD 1 Million) என்ற சாதனை அளவை எட்டியுள்ளது” என்றும் அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது நாட்டின் எரிபொருள் இருப்பு போதுமானதாக உள்ளபோதிலும், தேவையற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது நாட்டின் இருப்பை நீண்ட நாட்களுக்குத் தக்கவைக்கவும், மானியச் செலவினங்களின் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் என நிதி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Comments
Comment sent successfully!