Offline
Menu
சபாவின் கினபத்தாங்கான் பகுதியில் நிலநடுக்கம்
By Administrator
Published on 09/27/2026 09:00
News
அதிகாலையில் ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவு!

சபா, கினபத்தாங்கான் மாவட்டத்தில் உள்ள குவாமுட் பகுதியில் இன்று (செப்டம்பர் 26) அதிகாலை 5.32 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவான குறைந்த அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இந்த நிலநடுக்கம் வடக்கே 5.1 பாகையிலும், கிழக்கே 116.8 பாகையிலும், பூமிக்கு அடியில் 118 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.

 

“இந்த நிலநடுக்கத்தின் மையம் சபாவின் டோங்கோட் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. இந்தச் சம்பவத்தால் மலேசியாவிற்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை.” என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சபா மாநிலம் நில அதிர்வு மண்டலங்களுக்கு அருகில் அமைந்திருப்பதால், அங்கு குறைந்த அளவிலான நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்வது வழக்கமான ஒன்றாகும். பெரும்பாலான அதிர்வுகள் சிறிய அளவிலானவை என்பதால் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்துவதில்லை.

 

இன்றைய நிலநடுக்கம் குறித்து இதுவரை அவசர அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றாலும், கினபத்தாங்கானைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் கட்டடங்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகளிலும் தீவிர ரோந்துப் பணிகளிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனிடையே, இன்று அதிகாலை 5.23 மணியளவில் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள ‘லாயல்டி தீவுகளில்’ ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 47 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தாலும் மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என மெட்மலேசியா தெளிவுபடுத்தியுள்ளது.

Comments