அலோர் காஜாவிலுள்ள புக்கிட் தம்பூன் பெர்தானாவில் பெண் மாணவிகள் தங்கியிருந்த வாடகை வீடு ஒன்றில், 23 வயது மாணவி ஒருவர் சமையல் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
இன்று பிற்பகல் 1.44 மணியளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து, அலோர் காஜா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 9 தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தபோது, இரண்டு மாடி மாடிவீட்டின் சமையலறைப் பகுதியில் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. தீயணைப்புப் படையினரின் தீவிர போராட்டத்திற்குப் பிறகு பிற்பகல் 2.28 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 2.55 மணிக்கு முற்றிலும் அணைக்கப்பட்டது” என்று, மலாக்கா JBPM மண்டலம் 2-இன் தலைவர் சுல்கைரானி ரம்லி கூறினார்.
தீயணைப்புத் துறையின் முதற்கட்ட விசாரணையில், மாணவி சமையல் எரிவாயுப் அடுப்பின் இடதுபுறப் பொத்தானைத் (Knob) திருகியபோது தீ எரியவில்லை. இதையடுத்து, அந்தப் பொத்தானை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டு, அவர் புதிய சமையல் எரிவாயு உருளையை (Gas Cylinder) வாங்கி வரச் சென்றுள்ளார்.
புதிய கேஸ் சிலிண்டரைக் கொண்டுவந்து பொருத்திய பிறகு, அடுப்பின் வலதுபுறப் பொத்தானை இயக்க முயன்றபோது, ஏற்கனவே கசிந்து பரவியிருந்த சமையல் எரிவாயுவில் திடீரெனப் பலத்த தீப்பொறி உருவானது. இத்தீ உடனடியாகச் சமையலறையிலிருந்த எளிதில் தீப்பற்றக்கூடியப் பொருட்கள் மீது பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி உடனே வீட்டை விட்டு வெளியேறித் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.