Offline
Menu
வாள் ஏந்திய இரு நபர்கள் கைவரிசை!
By Administrator
Published on 10/01/2026 15:00
News
சாலையோர உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்தபோது துணிச்சல் கொள்ளை

தலைநகரிலுள்ள ஹேப்பி கார்டன், ஜாலான் ரியாங் ரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே அதிகாலை வேளையில் காபி அருந்திக் கொண்டிருந்த வாடகைக்கார் ஓட்டுநர் மற்றும் அவரது தோழியை வாள் முனையில் மிரட்டி இரு நபர்கள் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. 57 வயதான ‘காங்’ எனும் டாக்சி ஓட்டுநரும், அவரது 48 வயதுத் தோழியும் உணவகத்திற்கு வெளியே அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்து வந்த இரு நபர்கள் திடீரென அவர்கள் மீது பாய்ந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.”அவர்கள் எங்களைக் அசையக் கூடாது என மிரட்டி, எங்களிடமிருந்த பணப்பைகள் மற்றும் கைப்பைகளைக் பிடுங்கிக்கொண்டனர்.

 

இதில் RM1,100 ரொக்கம், தொலைபேசிகள், கார் சாவிகள் மற்றும் அடையாள ஆவணங்கள் உட்பட மொத்தம் RM3,000 மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட வாடகைக்கார் ஓட்டுநர் கூறினார்.

 

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவுகளை உணவக நிர்வாகத்தினர் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். கொள்ளையர்கள் இச்சம்பவத்திற்கு முன்பாகவே அப்பகுதியில் நீண்ட நேரமாகச் சுற்றித் திரிந்து நோட்டம்மிட்டது அதில் பதிவாகியுள்ளது.

 

இச்சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹூ சாங் ஹுக், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395/397-இன் (கூட்டுக் கொள்ளை மற்றும் ஆயுதத்தைப் பயன்படுத்தி கொள்ளையடித்தல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள கொள்ளையர்களைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Comments