ஜோகூர், பாசீர் கூடாங் துறைமுகம் வழியாக மலேசியாவிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற RM11.88 மில்லியன் (1.18 கோடி ரிங்கிட்) மதிப்புள்ள 637 டன் கொக்கோ விதைகளை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS) அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 3) பிற்பகல் 3.50 மணியளவில் துறைமுகத்திலுள்ள சரக்குக் கொள்கலன் ஒன்றை AKPS அமலாக்க அதிகாரிகள் சோதனை செய்தபோது இக்கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
“சோதனையின் போது உகாண்டா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட 6,37,000 கிலோ எடையுள்ள (9,100 மூட்டைகள்) கொக்கோ விதாக் தைகள் கண்டறியப்பட்டன. முழுமையற்ற மற்றும் சந்தேகத்திற்குரிய போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இவை கொண்டு வரப்பட்டதால், அனைத்துச் சரக்குகளும் மேல் விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக” எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு படை (AKPS) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எல்லைப் புறங்களில் தவறான அல்லது முரண்பாடான தகவல்களை வழங்கிச் சரக்குகளைக் கொண்டு வர முயல்வது 2011-ஆம் ஆண்டு மலேசியத் தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனைச் சேவைகள் சட்டத்தின் (சட்டம் 728) பிரிவு 13-இன் கீழ் கடுமையான குற்றமாகும்.
இக்குற்றத்திற்காக முதன்முறையாகக் குற்றவாளியாகக் காணப்படுபவருக்கு RM50,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தொடர்ந்து இரண்டாவது முறை இக்குற்றத்தில் ஈடுபட்டால் RM75,000 வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.