சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகமான 14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 24 வயது உணவக ஊழியர் ஒருவர் ஈப்போ அமர்வு நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட முகமட் அல்-ஃபிரஸ் ஷார்காவி முகமட் காமிஸ், கடந்த 2023 செப்டம்பர் 1 அன்று ஈப்போ, ஜாலான் ஹொஸ்பிட்டலில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 14 வயது 6 மாதங்கள் நிரம்பிய சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளம் வாயிலாக அறிமுகமான இருவரும் பின்னர் நேரில் சந்தித்துள்ளனர். இவர்களது தொடர்பினால் அச்சிறுமி கர்ப்பமானதை அடுத்து அவரது தாயாருக்கு உண்மை தெரியவந்தது.
குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(1)-ன் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
வழக்கின் விசாரணைக்கு முன்னர் ஆஜராகாததால் சந்தேக நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு RM8,000 பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது