Offline
Menu
பாசீர் கூடாங் குப்பை கிடங்கில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் தீ
By Administrator
Published on 10/16/2026 15:00
News
நீர் பற்றாக்குறையால் தீயணைப்புப் பணியில் சிக்கல்

ஜோகூர் பாரு: பாசீர்  கூடாங்கில் உள்ள கம்போங் பாசிர் பூத்தே, ஜாலான் முஹிப்பாவில் அமைந்துள்ள குப்பை கிடங்கு ஒன்றில், புதன்கிழமை (அக்டோபர் 14) இரவு முதல் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இந்தத் தீ, அருகில் இருந்த ஃபைபர் சேமிப்பு பகுதிக்கும் பரவியுள்ளது. அங்கு சுமார் 3 மீட்டர் (10 அடி) உயரத்திற்கு மிதவை கட்டிகள் (buoy blocks) அடுக்கப்பட்டிருந்தன.

ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு இரவு 10.04 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து, ஏழு நிமிடங்களிலேயே முதல் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது. செயல்பாட்டுத் தளபதி முகமது ஜுஹ்தியுஸ்னி சைட் கூறுகையில், ஆரம்பத்தில் 15.2 மீட்டர் x 15.2 மீட்டர் (50 அடி x 50 அடி) பரப்பளவு கொண்ட திறந்த வெளியில் தீ பற்றியிருந்ததாகத் தெரிவித்தார்.

அருகில் தண்ணீர் ஆதாரங்கள் இல்லாததால் தீயணைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தீயணைப்பு வீரர்கள் கடல் நீரையும், பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹைட்ரண்டிலிருந்து (hydrant) நீரையும் எடுத்துப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மிக அருகில் உள்ள ஹைட்ரண்ட் சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே, எங்கள் பணியாளர்கள் மீண்டும் மீண்டும் சென்று வாகனங்களின் தொட்டிகளை நிரப்ப வேண்டியுள்ளது என்று வியாழக்கிழமை (அக்டோபர் 15) அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆரம்பத்தில், தீயணைப்பு வீரர்கள் ஹோஸ் ரீல் (hose reel) மற்றும் 61 மீட்டர் (200 அடி) நீளமுள்ள குழாய்களைப் பயன்படுத்தினர். மேலும், அருகிலுள்ள கடலிலிருந்து நீரை எடுக்க கையடக்க பம்ப் (portable pump) ஒன்றும் பயன்படுத்தப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலை 3.17 மணியளவில், தீ சுமார் 46 சதுர மீட்டர் (500 சதுர அடி) பரப்பளவிற்குப் பரவியதுடன், மிதவை கட்டிகள் அடுக்கப்பட்டிருந்த ஃபைபர் சேமிப்பு பகுதியையும் சென்றடைந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியின் முன்பக்கத்திலிருந்தும் பின்பக்கத்திலிருந்தும் தீயை அணைக்கும் வகையில், மீட்புப் பணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. பாசீர் கூடாங், ஜோகூர் ஜெயா நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 18 தீயணைப்பு வீரர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாருக்கும் எந்தவித பாதிப்போ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

Comments