Offline
Menu
2 அரசு அதிகாரிகள் உட்பட 5 பேர் கைது
By Administrator
Published on 10/29/2026 14:00
News
வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான லஞ்ச விவகாரம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக, சுமார் 1 மில்லியன் ரிங்கிட் லஞ்சமாகக் கோரியதாகவும், அதைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு மத்திய அரசு அமலாக்க அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர்  இன்று காவலில் வைக்கப்பட்டனர். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) வெளியிட்ட தகவலின்படி, கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்கள் மற்றும் இரு பெண்கள் அடங்குவர். இவர்களின் வயது 40 முதல் 60-க்கு இடைப்பட்டதாகும். 

 

இவர்கள் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் சிலாங்கூர் மற்றும் ஜோகூர் மாநிலங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மற்ற மூவரும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான விவகாரங்களில் ஈடுபட்டு வரும் முகவர்கள் ஆவர்.

 

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சந்தேக நபர்கள் 2018 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இக்குற்றச் செயல்களில் ஈடுபடச் சதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 44 பணப் பரிமாற்றங்கள் இணையவழியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 

ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி திலிப் நாயர், சந்தேக நபர்களை நவம்பர் 1ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

ஜோகூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் ஹஸ்ருல் ஷஸ்ரீன், இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த வழக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் பிரிவு 16(a)(B) மற்றும் 16(b)(B)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments