Offline
Menu
புயல் பாதிப்பு: முதல் அமைச்சர் விஜய்யிடம் உதவி கோரிய சந்திரபாபு நாயுடு
By Administrator
Published on 11/04/2026 12:00
News

ஆந்திரப் பிரதேசத்தை முரசு புயல் நெருங்கி வரும் நிலையில், மின் கட்டமைப்புகளைச் சீரமைக்க தமிழக அரசின் உதவியை கோரி, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும், ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, மின் விநியோகக் கட்டமைப்புகளை விரைவாகச் சீரமைப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு சந்திரபாபு நாயுடு தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் கேட்டுக்கொண்டார்.

 

விஜய்யிடம் கோரிக்கை
குறிப்பாக, புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்தால் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தமிழகத்தில் இருந்து மின்துறை பணியாளர்கள் மற்றும் தேவையான இயந்திரங்களை ஆந்திராவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் சாதகமாகப் பதிலளித்துள்ளார். தேவையான பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்பி உதவுவதாக உறுதியளித்துள்ளார் என்று ஆந்திர முதல் மந்திரி அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, கர்நாடக முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமாரிடமும் சந்திரபாபு நாயுடு உதவி கோரியுள்ளார். ஏற்கெனவே அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவில் மின் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணியில் தெலங்கானா மாநில மின்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comments