அதிகரித்து வரும் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், மலேசிய ஆயுதப்படையின் நான்காவது பிரிவாக புதிய சைபர் பாதுகாப்புப் படையை உருவாக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
முதலில் 2030ஆம் ஆண்டில் இந்தச் சைபர் படையை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், அதற்கு முன்னதாகவே படையை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
இதற்காகப் புதிய படைப்பிரிவின் நிர்வாக மற்றும் செயல்பாட்டுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கென ஆரம்பக்கட்டக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இணையத் தாக்குதல்கள் இன்று தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறிவருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்பாராத அச்சுறுத்தல்களைச் சந்திக்கும்போது நாடு தயாரற்ற நிலையில் இருக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
எனவே, சைபர் படையை விரைவாக நிறுவ வேண்டிய அவசியம் குறித்து அரசாங்கத்திடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, வடகிழக்குப் பருவமழையால் ஏற்படக்கூடிய வெள்ளம் உள்ளிட்ட அவசரநிலைகளை எதிர்கொள்வதற்கும் மலேசிய ஆயுதப்படை தயார்நிலையில் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
தேவைப்படும் நேரத்தில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக 5,234 இராணுவ வீரர்கள், 589 தரைவழி வாகனங்கள் மற்றும் உபகரணங்கள், 344 நீர்வழி சாதனங்கள் மற்றும் பல்வேறு வான்வழி உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.