Offline
Menu
கோழிகளை ஏற்றிச் சென்ற லோரியுடன் கார் மோதி விபத்து!
By Administrator
Published on 11/19/2026 13:00
News
இருவர் பலி; பெண் ஒருவர் காயம்!

பேராக் மாநிலத்தில், கெரிக் – ஜெலி நெடுஞ்சாலையில் கோழிகளை ஏற்றிச் சென்ற லோரியுடன் ஹோண்டா சிவிக் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும், பெண் ஒருவர் காயமடைந்தார்.

 

இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில், ரசாலி ஷக்ரி (45) மற்றும் நோர்மலிசா அப்துல் மனாப் (36) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து அதிகாலை 12.52 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெரிக் தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டனர்.

 

அவர்கள் அதிகாலை 1.55 மணியளவில் சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர்.

 

விபத்தில் காரில் பயணித்த மற்றொரு பெண் காயமடைந்த நிலையில், மீட்புக் குழுவினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவரை மீட்டு மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

 

இதனிடையே, கோழிகளை ஏற்றிச் சென்ற இசுசு லோரியின் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் காயமின்றி உயிர் தப்பினர்.

 

உயிரிழந்த இருவரின் உடல்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதிகாலை 2.35 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, 3.40 மணியளவில் முழுமையாக நிறைவடைந்ததாகப் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபரோட்சி நோர் அஹ்மட் தெரிவித்தார்.

Comments