Offline
நடுவானில் குலுங்கிய விமானம்; 7 பயணிகள் படுகாயம்
Published on 09/02/2024 00:55
News

மெக்சிகோவின் கான்கன் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு யு.ஏ-1196 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. போயிங் 737-900 விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 179 பேர் பயணித்தனர்.லூசியான நகரம் அருகே சென்றபோது அந்த விமானம் திடீரென நடுவானில் குலுங்கியது. அப்போது பயணிகள் தங்களது இருக்கையில் இருந்து நகர்ந்து முன் இருக்கை மீது மோதினர். இதனால் பயந்துபோன பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.

இதனையடுத்து விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது டென்னசி விமான நிலையத்தில் தரையிறங்கும்படி அறிவுறுத்தப்பட்டது.அதன்படி அந்த விமானம் அவசரமாக டென்னசி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த 7 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் வேறொரு விமானம் மூலம் அவர்கள் சிகாகோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. எனினும் விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments