Offline
18 வயது சைக்கிளோட்டி உயிரிழப்பு: பேருந்து ஓட்டுநருக்குச் சிறை
Published on 09/03/2024 04:48
News

சென்ற ஆண்டு (2023) ஜூலை 12ஆம் தேதி 18 வயது சைக்கிளோட்டி மீது மோதி, மரணம் விளைவித்த பேருந்து ஓட்டுநருக்குப் பத்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈசூன் அவென்யூ 2க்கும் ஈசூன் ரிங் ரோட்டிற்கும் இடையிலான சந்திப்பில் அந்த விபத்து நிகழ்ந்தது.

சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதாகக் கூறப்பட்டது.

38 வயதாகும் பேருந்து ஓட்டுநர் யுவான் சாங்சிங், சீனாவைச் சேர்ந்தவர். செப்டம்பர் 2ஆம் தேதி, காணொளி வாயிலாக விசாரணையில் முன்னிலையான அவர், விபத்து தொடர்பான காணொளி நீதிமன்றத்தில் திரையிடப்பட்டபோது தேம்பி அழுதார்.

முன்னதாக, கவனமின்றி வாகனம் ஓட்டி, மரணம் விளைவித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

எட்டு ஆண்டுகளுக்கு அனைத்து வாகனங்களுக்குமான அவரது ஓட்டுநர் உரிமமும் செல்லுபடியாகாது.

சம்பவ நாளன்று, ஈசூன் ரிங் ரோட்டில் இடப்பக்கம் திரும்ப முனைந்த யுவான், பேருந்தின் வேகத்தைக் குறைக்கத் தவறினார். நடந்துசெல்வோர் சாலையைக் கடக்கும் பகுதியில் சைக்கிளில் சாலையைக் கடந்த மலேசியர் ஜெஃப்சன் டாங்கை அவர் கவனிக்கவில்லை.

உடற்கூறாய்வில், ஜெஃப்சன் டாங் தலையிலும் மார்பிலும் ஏற்பட்ட காயங்களால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Comments