Offline
சர்ச்சையில் சிக்கிய அழகி, மிஸ் நைஜீரியா பட்டம் வென்றார்
Published on 09/03/2024 05:09
News

நைஜீரியா தலைநகர் லாகோசில் மிஸ் நைஜீரியா அழகி போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் மிஸ் நைஜீரியா அழகியாக சட்டக்கல்லூரி மாணவியான 23 வயது சிதிம்மா அடெட்ஷினா தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டத்தை வென்ற அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். அழகி பட்டம் வென்ற சிதிம்மா அடெட்ஷினா கடந்த ஜூலை மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த மிஸ் தென் ஆப்பிரிக்கா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

அப்போது அவர் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் அல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவரது தாயார் தென் ஆப்பிரிக்காவில் வசிப்பது போன்று ஏமாற்றியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. இதையடுத்து சிதிம்மா அடெட்ஷீனா தென் ஆப்பிரிக்கா அழகிப் போட்டியில் இருந்து மனவேதனையுடன் வெளியேறினார். இதனால் அவரால் இறுதி போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இவரது தந்தை நைஜீரியாவை சேர்ந்தவர். இதனால் மிஸ் நைஜீரியா போட்டியில் பங்கேற்க சிதிம்மா அடெட் ஷீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை ஏற்று அவர் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி உள்ளார். அவர் கூறியதாவது:- என்னுடைய பயணம் மிகவும் கடுமையானது. தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பெருமையாகவும் இருக்கிறது. எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாம் ஒருவரோடு ஒருவர் சண்டையிடக் கூடாது. கறுப்பு கண்டமான ஆப்பிரிக்கா ஒன்றுபட வேண்டும். இதை தான் எப்போதும் விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒரே குடும்பம். நாம் அனைவரும் ஒரே அனைவரும் ஒரே மனிதர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார். இந்த போட்டியில் வென்றது மூலம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச பிரபஞ்ச அழகி போட்டியில்  சிதிம்மா பங்கேற்க உள்ளார். இதில் நான் எப்படியும் வெற்றி பெறுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Comments