Offline
ஏசி இல்லை; மயங்கி விழுந்த பயணிகள்: மன்னிப்பு கோரிய இண்டிகோ
Published on 09/09/2024 02:18
News

புதுடெல்லி: இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் குளிர்சாதன வசதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகினர். வியாழக்கிழமை அன்று டெல்லியில் இருந்து அந்த விமானம் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. அப்போது குளிர்சாதனம் இயங்காததால் பயணிகள் அமரும் பகுதியில் கடும் வெப்பம் நிலவியது. இதனால் பல பயணிகள் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள காணொளிப் பதிவு ஒன்றில், பல பயணிகள் விமானத்தில் இருந்த பத்திரிகைகளைக் கொண்டு விசிறிக்கொள்வதும், சில பயணிகள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மன்னிப்பு கோருவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமானப் பணியாளர்கள் உரிய உதவிகளைச் செய்ததாகவும் அந்நிறுவனம் கூறியது.

கடந்த ஜூன் மாதமும், டெல்லியில் இருந்து பக்டோக்ரா சென்ற இண்டிகோ விமானத்தில் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டது. அச்சமயம் விமானத்தில் இருந்த முதியவர்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர். சில பயணிகள் தாங்கள் கடத்தப்பட்டதைப் போன்று உணர்வதாகவும் கோபப்பட்டனர்.

Comments