Offline
உணவுண்ணும் போட்டியின்போது தொண்டையில் இட்லி சிக்கி ஆடவர் உயிரிழப்பு
Published on 09/15/2024 15:52
News

பாலக்காடு: உணவுண்ணும் போட்டியின்போது இட்லி தொண்டையில் சிக்கி ஆடவர் ஒருவர் உயிரிழந்த துயரம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்தது.

மாண்டுபோனவர் பாலக்காடு மாவட்டம், ஆலமரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 50, எனத் தெரிவிக்கப்பட்டது.

ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, கொல்லபுரா, நல்லமரம் பகுதியைச் சேர்ந்த இளையர் குழு ஒன்று, இட்லி உண்ணும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அப்போட்டியில் கலந்துகொண்ட திரு சுரேஷ், மூன்று இட்லிகளை ஒன்றாக விழுங்க முற்பட்டபோது அது தொண்டையில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, திரு சுரேஷ் உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து வாளையாரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

அவர் சரக்கு வாகன ஓட்டுநராக வேலை செய்துவந்தார். இச்சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் எனக் குறிப்பிட்டு, காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

Comments