Offline
Menu
ஜாஹிட் நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சீனாசென்றடைந்தார்
By Administrator
Published on 11/05/2025 14:54
News

கோலாலம்பூர்:

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி, சீன அனைத்துலக இறக்குமதி கண்காட்சியில் (CIIE) பங்கேற்பதற்காக நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இரவு சீனாவின் ஷாங்காய் சென்றடைந்தார்.

அவரையும் மலேசியக் குழுவையும் ஏற்றிச் சென்ற விமானம் இரவு 11.14 மணிக்கு ஷாங்காய் ஹாங்கியாவோ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அங்கு சீனாவுக்கான மலேசிய தூதர் டத்தோ நார்மன் முகமட் மற்றும் ஷாங்காய் தலைமைத் தூதர் ஜெனரல் ஷஹாஃபீஸ் ஷஹாரிஸ் ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.

பின்னர் மலேசிய பிரதிநிதிகள் குழுவை அவர்கள் தங்கும் ஹோட்டலில் வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மலேசிய வெளிவர்த்தக மேம்பாட்டு கழகம் (MATRADE) தலைவர் டத்தோஸ்ரீ ரீசல் மெரிகன் நைனா மெரிகன் மற்றும் மஜ்லிஸ் அமானா ரக்யாத் (MARA) தலைவர் டத்தோ அசிரஃப் வாஜ்டி துசுகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது ஜாஹிட்டின் இவ்வாண்டிற்கான முதல் சீனா பயணமாகும். இந்த விஜயம், மலேசியா மற்றும் சீனாவுக்கிடையிலான பல்துறை உறவுகளை வலுப்படுத்தவும், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் மலேசியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இந்த பயணத்தின் போது, ஜாஹித் ஷாங்காய் 2025 மலேசியா சர்வதேச ஹலால் காட்சிப்படுத்தல் (MIHAS) நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளார். மேலும், சீனாவின் ஹலால் துறையில் முக்கிய பங்குதாரர்களைச் சந்தித்து புதிய வாய்ப்புகளை ஆராயவுள்ளார்.

இது உலகளாவிய சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், ஹலால் துறையில் முன்னணி நாடாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்தவும் முக்கியமான அடியாகும்.

கடந்த ஆண்டு, சீனா மலேசியாவின் இரண்டாவது பெரிய ஹலால் ஏற்றுமதி சந்தையாக இருந்தது — மொத்த ஏற்றுமதி மதிப்பு RM7.04 பில்லியன் ஆகும்.

மேலும், அவர் 8வது சீன அனைத்துலக இறக்குமதி கண்காட்சியின் (CIIE) தொடக்க விழாவில் பங்கேற்பதுடன், ACCCIM (மலேசிய சீன வர்த்தக மற்றும் தொழில்துறை சபை) அரங்கையும் பார்வையிடவுள்ளார்.

அதன்பின்னர், ஹலால் தொழில், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் மலேசியா மற்றும் சீன நிறுவனங்களுக்கிடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) பரிமாறப்படும் என்றும் கூறப்படுகிறது.

Comments