கோலாலம்பூர்:
2024, ஜனவரி 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் வரை 21 ஆயிரத்து 441 வணிக குற்றச் செயல் புகார்கள் பதிவு செய்யப்பட்டள்ளன. இதனால் ஏற்பட்டிருக்கும் இழப்பு 1.78 பில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று சிசிஐடி புக்கிட் அமான் வணிக குற்றப்புலன் விசாரணை இலாகா இயக்குனர் கமிஷனர் டத்தோஸ்ரீ ரம்லி யூசுப் கூறினார்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் இக்குற்றச்செயல்களின் எண்ணிக்கை 11 விழுக்காடு குறைவாகும் என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டு மொத்தம் 10 ஆயிரத்து 198 அல்லது 48 விழுக்காட்டு புலன்விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 48 விழுக்காடு அதிகமாகும் என்று அவர் சொன்னார்.
வணிக குற்றச்செயல்களை தடுப்பதற்கும் குறைப்பதற்குமான முயற்சிகளை போலீஸ் தீவிரப்படுத்தி மிகுந்த ஈடுபாட்டுடன் அமல்படுத்தியதில் இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று ரம்லி குறிப்பிட்டார்.