Offline
ரூ.50 கோடியை நெருங்கும் நஸ்ரியாவின் படம்
Published on 12/13/2024 01:30
Entertainment

நஸ்ரியா கதாநாயகியாக நடித்துள்ள ‘சூட்சும தர்ஷினி’ படம் ரூ.50 கோடியைத் தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகனாக ‘மின்னல் முரளி’ பட இயக்குநரும் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மற்றும் ‘குருவாயூர் அம்பலநடையில்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவருமான பஷில் ஜோசப் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை எம் சி என்பவர் இயக்கி இருந்தார். தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் இளைஞர் ஒருவரின் மர்மமான செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வித்தியாசமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் நஸ்ரியா இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

படம் வித்தியாசமான கதையம்சம் மற்றும் புதிய கோணத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இறுதி 40 நிமிடங்கள் இந்தப் படத்தின் எதிர்பாராத திருப்பங்களாக அமைந்து படத்தின் வெற்றிக்கும் வித்திட்டன.

தற்போது படம் வெளியாகி 18 நாட்கள் ஆன நிலையில் இந்தப் படம் ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இந்திய அளவில் 28.05 கோடியும் வெளிநாடுகளில் 21.7 கோடியும் வசூலித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் ‘புஷ்பா 2’ திரைப்படம் தன் ஆதிக்கத்தைச் செலுத்தினாலும்கூட இந்த ‘சூட்சும தர்ஷினி’ படம் பல திரையரங்குகளில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே மலையாளத்தில் இந்த ஆண்டில் வெளியான ‘பிரேமலு’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘ஆவேசம்’ உள்ளிட்ட படங்கள் ரூ.100 கோடி தாண்டி வசூலித்தன. அந்தவகையில் ‘சூட்சும தர்ஷினியும்’ அந்த இலக்கை எட்டும் என்று கூறப்படுகிறது.

Comments