கோலாலம்பூர்:
இந்திய சமூகத்திற்கான தொழில்முனைவோர் நிதி 100 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டதாக தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணை அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார். SPUMI திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட்டும், SPUMI பெரு நிதியளிப்புத் திட்டத்திற்கும் 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது சவாலான பொருளாதார சூழலில் இந்தியத் தொழில்முனைவோரின் வர்த்தகத்தை மேம்படுத்த உதவும் என அவர் கூறினார்.
2025 வரவுசெலவுத் திட்டத்தில் SPUMI திட்டத்திற்கு 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமரின் அறிவுறுத்தலுக்கு பிறகு அதனை 100 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியது. 2008இல் தொடங்கப்பட்ட இந்த நிதி உதவி திட்டம், இதுவரை 26,804 தொழில்முனைவோருக்கு 500 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கியுள்ளதுடன், இந்த ஆண்டில் 5,000 தொழில்முனைவோர் பலனடைய வாய்ப்பு உள்ளது.
இந்தியத் தொழில்முனைவோர் ஜனவரி 14 முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். 1,000 முதல் 50,000 ரிங்கிட் வரை கடன்கள் வழங்கப்படும், மேலும் பெரு நிதியளிப்புத் திட்டத்தின்கீழ் 50,000 முதல் 100,000 ரிங்கிட் வரை நிதி கிடைக்கும்.