Offline

LATEST NEWS

தெலுங்கானாவில் விஜய் தேவரகொண்டா உள்பட 25 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
By Administrator
Published on 03/21/2025 18:54
News

ஐதரபாத்,தெலுங்கானாவில் உள்ள மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா. இவர் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது சைபராபாத் போலீசார் புகார் அளித்துள்ளார். அதில், “தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள்.

இந்த சூதாட்ட செயலிகளில் பலரும் பணத்தை இழந்துள்ளனர். நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் பிரபலங்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்துகிறர்கள்.இதனால் பணத்தேவை உடையவர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்படுகிறார்கள். இதை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் பெரிய அளவில் தொகையை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே சட்ட விரோதமாக இந்த செயலிகளை பிரபலப்படுத்தும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலுங்கு திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments