அமெரிக்காவின் கென்டக்கி, மிசோரி, விர்ஜீனியாவை அடுத்தடுத்து கடுமையான சூறாவளி தாக்கியதால் 28 பேர் உயிரிழந்தனர்.
கென்டக்கி மாகாணம் சூறாவளியால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு மட்டும் ஒரு தீயணைப்பு வீரர் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். சூறாவளியில் நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன், வாகனங்கள் துாக்கி வீசப்பட்டன.
மிசோரியின் செயின்ட் லூயிஸ் பகுதியில் மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. கனமழையுடன், புழுதி புயலும் வீசியதால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. மத்திய அமெரிக்கா முழுவதும் சில தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், சூறாவளி வீசும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் இப்பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.