ஜோகூர் பாரு,
45 வயதான பாகிஸ்தான் பிரஜை ஒருவர், போதையில் வாகனம் ஓட்டி உணவகத்துக்குள் மோதி விபத்து ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை ஜோகூர் பாருவில் ஜாலான் ரியாங் உத்தாமா பகுதியில் நடைபெற்றது.
சந்தேகநபர் பெரோடுவா கெலிசா (Perodua Kelisa) வகை காரை ஓட்டியபோது, இருசக்கர வாகனங்களையும் மற்றொரு காரையும் பின்னால் மோதி, பின்னர் தப்பிசென்றதாக ஜோகூர் பாரு Selatan மாவட்டக் காவல் தலைவர் ராவுப் சிலமாட் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
விபத்துக்கு பின்னர், போக்குவரத்து போலீசாரால் பாசிர் குடாங் நெடுஞ்சாலையில் பின்தொடரப்பட்ட சந்தேகநபர், முதலில் போலீசாரின் உத்தரவுகளை உதாசீனம் செய்தார். பிறகு கிலோமீட்டர் 8 அருகே வாகனத்தை நிறுத்தி கீழிறங்கிய அவர், சாலையை கடந்து ஓடிச்சென்று வேலியை கடந்து 2 மீட்டர் உயரமுள்ள சுவரிலிருந்து குதித்து தப்ப முயன்றார்.
எனினும் அவர் காயமடைந்த நிலையில் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டதாக ராவுப் தெரிவித்தார்.
சந்தேகநபர் சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விசாரணைக்காக அவரது இரத்த மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளது.
குற்றச் சட்டம் பிரிவு 186, குடிவரவு சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(C), சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவுகள் 44(1) மற்றும் 26(1) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.