2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்: மலேசியாவின் எதிர்கால வளர்ச்சியை நோக்கி சக்திவாய்ந்த திட்டம்
புத்ராஜெயா,
வரும் அக்டோபர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், அண்மையில் வெளியிடப்பட்ட 13வது மலேசியத் தேசியத் திட்டத்தின் (RMK13) இலக்குகளை ஆதரிக்கும் முக்கிய பட்ஜெட்டாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்ஜெட் மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது:
1.உச்சவரம்பை உயர்த்துதல் (Enhancing the ceiling)
2.அடித்தள வரம்பை உயர்த்துதல் (Raising the baseline)
3.பொது நிர்வாகத்தில் நல்லாட்சியை வலுப்படுத்துதல் (Strengthening governance)
2026 பட்ஜெட்டை அக்டோபர் 10ஆம் தேதி தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிகழ்ச்சி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஸிசான் கூறுகையில், “உச்சவரம்பை உயர்த்துவதன் மூலம் நாட்டின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதுடன், உயர் வளர்ச்சி மற்றும் அதிக தாக்கம் உள்ள துறைகளான செமிகண்டக்டர், எரிசக்தி மாற்றம் மற்றும் இஸ்லாமிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிலும் தீவிர முதலீடுகளை நோக்கமாகக் கொண்டுள்ளது அரசு,” எனத் தெரிவித்தார்.
மலேசியாவில் உருவாக்கப்பட்ட (Made in Malaysia) பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (PKS) மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மதிப்பு சார்ந்த பொருளாதார வளர்ச்சி, ஆக்கத்திறன் மேம்பாடு, இலக்கவியல் (Data Analytics) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பணி நிரல்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், 2026 பட்ஜெட்டுக்கான கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பொதுத் துறை அமைப்புகள், தொழில்துறை மற்றும் வர்த்தகச் சங்கங்களின் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் பங்கேற்றனர்.