Offline
எல்ஆர்டி தடத்தில் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டு நபர் கைது
By Administrator
Published on 08/08/2025 09:00
News

கோலாலம்பூர், 

அம்பாங் வழித்தடத்தில் உள்ள மஸ்ஜிட் ஜாமேக் இலகு ரயில் (LRT) நிலையத்தில், தண்டவாளம் வழியாக சட்டவிரோதமாக நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு வெளிநாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை 10.11 மணியளவில், இரண்டாவது பிளாட்ஃபாரத்திலிருந்து முதலாவது பிளாட்ஃபாரத்திற்குத் தண்டவாளம் வழியாக நகரும் அந்த நபரை, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் (ICC) கண்காணித்ததாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP சுலிஸ்மி அப்பெண்டி சுலைமான் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும், பிரசரானா நிறுவனத்தின் துணை காவல் அதிகாரியான புகார்தாரர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, 20 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரைக் கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட நபர் மேல் நடவடிக்கைக்காக டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், விசாரணையில் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை வழங்கத் தவறியதோடு, வேலைக்கு செல்வதற்காக குறுக்குவழியில் தண்டவாளம் வழியாகச் சென்றதாக ஒப்புக்கொண்டதாகவும் ACP சுலிஸ்மி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தண்டனைச் சட்டம் பிரிவு 447 மற்றும் குடிநுழைவு சட்டம் 1959/63 – பிரிவு 6(1)(c)ன் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117ன் கீழ் சந்தேக நபரை காவலில் வைப்பதற்கான கோரிக்கை இன்று நீதிமன்றத்தில் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை மற்றும் பிறரின் பாதுகாப்பை கவனித்து, தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நுழைவதை தவிர்க்க வேண்டும் என்றும், இதுபோன்ற சட்ட மீறல்களை கோலாலம்பூர் காவல் தலைமையக ஹாட்லைன் (03-2146 0522)டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகம் (03-2600 2222) அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திற்கும் உடனடியாக தெரிவிக்கலாம் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.

Comments