Offline
சென்னை விமானநிலையத்தில் இயந்திரக் கோளாறால் விமானம் அவசர தரையிறக்கம்: 166 பேர் உயிர் தப்பினர்
By Administrator
Published on 08/16/2025 09:00
News

மீனம்பாக்கம்:

கோலாலம்பூரில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு பறந்து கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

அந்த விமானம் விபத்திலிருந்து தப்பியதுடன், அதில் இருந்த 158 பயணிகள் உள்பட 166 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு 158 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 166 பேருடன் ஏர் ஏசியன் ஏர்லைன்ஸ் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த விமானம் நேற்று நள்ளிரவு 11.50 மணியளவில் சென்னை வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதே நிலையில் விமானத்தை தொடர்ந்து இயக்கினால் பேராபத்து நிகழலாம் என்பதை உணர்ந்து, இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னையில் ஏர் ஏசியன் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதகதியில் செய்து முடிக்கப்பட்டது. பின்னர், அந்த விமானம் சென்னையில் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கோழிக்கோடு நோக்கி சென்ற ஏர் ஏசியன் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக, நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர், விமானத்தில் பொறியாளர்கள் ஏறி, இயந்திரக் கோளாறுகளை பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், அந்த விமானத்தின் பழுதுபார்க்க முடியவில்லை.

இதனால் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசு பேருந்துகள் மூலம் சென்னை நகர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த விமானத்தின் இயந்திரக் கோளாறு பழுதுபார்க்கப்பட்டு, இன்று மாலை மீண்டும் கோழிக்கோடுக்குப் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விமானம் நடுவானில் பறந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுத்து, சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கியதால், விமானத்தில் இருந்த 158 பயணிகள் உள்பட 166 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனால் சென்னை விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.

Comments