செப்பாங்,
107 மறுசீரமைக்கப்பட்ட டயர்களில் போலி சிரிம் (SIRIM) லோகோ ஸ்டிக்கர்கள் ஒட்டிய வழக்கில், ஒரு நிறுவனம் மற்றும் அதன் இரண்டு இயக்குநர்கள் இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
Yik Woh Tyre Enterprise Sdn Bhd என்ற நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களான யிப் வெய் லியோங் (43) மற்றும் யிப் விங் கீ (70) ஆகியோர் நீதிபதி அஹ்மத் ஃபுவாத் ஓஸ்மான் முன்னிலையில் குற்றமற்றவர்கள் என வாதிட்டனர்.
குற்றச்சாட்டு படி, வணிக நடவடிக்கைகளின் போது அவர்கள் சிரிம் அங்கீகாரம் இன்றி, SIRIM MS 224:2005 லோகோ ஸ்டிக்கர்கள் ஒட்டிய டயர்களை விநியோகிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த குற்றம் பிப்ரவரி 13 அன்று காலை 11.30 மணியளவில், புத்சோங், மெராந்தி ஜெயா தொழிற்பேட்டையில் உள்ள ஜாலான் மெராந்தி 11-ல் அமைந்த எண் 11, 13 மற்றும் 15 ஆகிய முகவரிகளில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு இயக்குநர்களும் 2011 வர்த்தக விளக்கம் சட்டத்தின் பிரிவு 21(b) கீழ், அதிகபட்சம் RM200,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிந்தால் அபராதம் RM500,000 மற்றும் சிறைத் தண்டனை ஐந்து ஆண்டுகள் வரை அதிகரிக்கும்.
நிறுவனம் மீது அதே சட்டத்தின் பிரிவு 21(a) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முதல் குற்றமாக இருந்தால் அதிகபட்சம் RM500,000 அபராதமும், மீண்டும் குற்றம் புரிந்தால் அதிகபட்சம் RM1 மில்லியன் அபராதமும் விதிக்கப்படும்.
எனினும் , சந்தேக நபர்கள் தலா RM20,000 ஜாமீனில் விடுதலை செய்யப்பட வேண்டும் என வழக்கறிஞர் மொஹ்ட் ஹபிசி கோரினார். நீதிமன்றம் தலா RM10,000 ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. வழக்கு செப்டம்பர் 25க்கு ஒத்திவைக்கப்பட்டது.