Offline
ரசிகர் கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்தான நிலையில் கைது
By Administrator
Published on 08/16/2025 09:00
Entertainment

பெங்களூரு,கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சி பாளையா போலீசாரால் கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். தர்ஷன் போன்று, அவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கும் இந்த வழக்கில் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது.

ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கு ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஜூலை மாதம் நிறைவு பெற்று, தீர்ப்பு அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தர்ஷன் ஜாமீனுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில், தர்ஷன் உட்பட 7 பேருக்கு வழங்கிய ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் உத்தரவு இயந்திரத்தனமாக உள்ளது, ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும், சாட்சிகளும் மிரட்டப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிய ரசிகரை கொலை செய்த வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடிகர் தர்ஷனை பெங்களூருவில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிறையில் அவர்களுக்கு சிறப்பு சலுகை கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments