மும்பை:பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார்.
ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர் 2015-ம் ஆண்டில் இருந்து 2023 காலகட்டங்களில் ரூ.60.48 கோடி பணம் கொடுத்துள்ளார். அதிக வட்டியை தவிர்க்க, இதை முதலீடு என மாற்றி பதிவு செய்ததாக கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.
பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன், அந்தத் தொகையை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: தலைவன் இறங்கி சரிதம் எழுதவே- கூலி படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
இந்தச் சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
அதன்பிறகு, அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என கோத்தாரி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஜூஹு காவல் நிலையத்தில் கோத்தாரி புகார் அளித்தார்.
இந்நிலையில், புகாரின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.