மும்பை,ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பின் மூலம் உலகிற்குத் தெரியப்படுத்திய 3 ராணுவ அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சீருடையுடன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் ‘கோன் பனேகா குரோர்பதி’ சீசன் 17 என்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதில் வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த 11-ம் தேதி இந்த எபிசோடுக்கான புரோமோ வெளியானது. அதில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பின் மூலம் உலகிற்குத் தெரியப்படுத்திய இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் இந்திய கடற்படையின் கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலி ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 9 மணிக்கு சோனி டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சிறப்பு எபிசோடில், ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7-ம் தேதி இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் பற்றி அதிகாரிகள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 3 ராணுவ அதிகாரிகளும் ராணுவ சீருடையுடன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தனது ‘விளம்பர’ வெற்றிக்காக ஆபரேஷன் சிந்தூரை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.