Offline
RM40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; மூவர் கைது
By Administrator
Published on 08/20/2025 09:00
News

மலாக்கா:

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் மலாக்காவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தொடர் சோதனைகளில், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை சேமிப்பு மையமாக பயன்படுத்திய போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கைதுசெய்தனர்.

இந்த சோதனைகளில் மொத்தம் 94.84 கிலோ கஞ்சா உட்பட, 41 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று , புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹூசேன் ஓமர் கான் தெரிவித்தார்.

மாலை 4.15 மணி முதல் 6.10 மணி வரை நடந்த சோதனைகளில், 25 முதல் 46 வயதுடையோர் ஆகிய மூவர் — அதில் ஒருவர் பாகிஸ்தானியர் — கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், உள்ளூர்வாசி ஒருவரும் பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களது வாகனத்திலிருந்து 26.73 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அதே குடியிருப்பின் மற்றொரு பிரிவில் நடைபெற்ற சோதனையில், கஞ்சா, கெத்தமின், ஷாபு உள்ளிட்ட போதைப்பொருள் சேமிப்பு வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டாவது சோதனையின் போது, மலாக்கா ஆயர் மோலேக்கில் உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது காரில் சோதனை நடத்தியபோது 18.25 கிலோ ஹெரோயின் மற்றும் பிற போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்:

கஞ்சா – 94.84 கிலோ, கஞ்சா – 2.58 கிலோ, கெத்தமின் – 42.23 கிலோ, ஷாபு – 143 கிராம், எராமின் 5 மாத்திரைகள் – 810 கிராம், ஹெரோயின் பேஸ் – 18.25 கிலோ

போதைப்பொருள்கள்கள் தவிர, சுமார் 70,000 வெள்ளி மதிப்புள்ள டோயோட்டா எஸ்டிமா, பெரோடுவா மைவி ஆகிய இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 42.33 லட்சம் வெள்ளி என ஹூசேன் குறிப்பிட்டார்.

Comments